Tuesday, June 30, 2015

மலரே!

மலரே! 
மகரந்தம் தூவிச் செல் 

தென்றலே! 
தேகம் தீண்டிச் செல் 

வசந்தமே!
சுகந்தம் பரப்பிச் செல் 

சொந்தமே!
மனம் நிறைந்து நில்.


#நீலா

மழைமகளே

எமது தாகம் தணித்து
தேகம் குளிர வைத்து
நல் ஆரோக்கியம் தந்து
வாழ்வின் இறுதி வரை
கூடவே கலந்து வரும்
வளம் குன்றா அட்சயமே

பூமித்தாய் மனம் மகிழ
புண்ணியம் செய்தவளே
விவசாயம் தழைத்கோங்க
விண்ணின் வழி வந்தவளே
இன்னபிற தேவைகளை
தனை ஈந்து தீர்த்தவளே.

நிறமில்லா நீர்த்தாயே
இத்தலம் செழித்தோங்க
இன்பமாய் உனைத் தந்து
மண்ணுயிர் காத்து நிற்கும்
மாசற்ற உத்தமியே மாதாவே
வணங்குகிறேன் மழைமகளே.


 நீலா

காகிதப் பூக்கள்

காகிதப் பூக்கள்
மணப்பதில்லை
கண்களைக் கவர்ந்து
ஈர்த்திழுக்கும்.

சூசகமாகவே நான்
உணர்த்தியிருந்தும்
உரைக்கவில்லை உனது
புத்தியில்

கவிஞன் நீயதை
உதறியதாலே
கலங்கி வரைகிறாய்
சோகக்கதை.

கண்களைத் திறந்துவை
கருத்தில்கொள்
கலைஞன் நீயிரு
கவனமாகவே.

கவலை வேண்டாம்
இனிமேலும்
ஒருநிலைப் படுத்து
உன்மனதை.

காகிதப் பூக்கள்
மணப்பதில்லை
கண்களைக் கவர்ந்து
ஈர்த்திழுக்கும்.

#நீலா


கையூட்டு இங்கே

லஞ்சம் எனப்படும் கையூட்டு இங்கே
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்
காரியம் சாதிக்க கொடுக்கும் லஞ்சம்
அதை முடிக்க வாங்கும் லஞ்சம்

கடையூழியர் முதல் உயரதிகாரி வரை
அரசும் தனியார் நிறுவனமும் எங்கேயும்
காசின் மேல்தான் கவனம் தினமும்
கொடுத்தால் தான் வேலை முடியும்

கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம்
கொடுப்பவரும் உடந்தையே லஞ்ச ஊழலுக்கு
கொடுப்பதை மறுத்தால் வாங்கும் நிலையிராது
இருவரையும் தண்டிப்பதே முறையாகும் என்பேன்.

கொடுக்கவில்லை எனில் காரியமும் முடியாது
அப்படியே முடிந்தாலும் அது தாமதமாகவே
வேலை வாங்கும் உயர் அதிகாரிக்கும்
தட்டிக் கேட்கும் தணிக்கை யருக்கும்

மந்திரிகட்கும் முதல்வருக்கும் பிரமுகர் கட்கும்
சிறைப் பிடிக்கும் காவலருக்கும் ஆய்வாளருக்கும்
வாதாடும் வக்கீல்கட்கும் தீர்ப்பு வழங்கும்
நீதிபதிக்கும் சில்லரை சென்றால் ஜெயமே.

இருப்பவர் கொடுப்பார் இல்லாதோர் என்செய்வர்
எம்தேசத்தின் இந்நிலை மாறுவது எப்போது
கீழிருந்து மேல்வரை கடும் தண்டனை
மிகவும் அவசியம் இங்கே இப்போது.

#நீலா


கூர் மழுங்கியதோர் சிற்றுளி


சிலை வடிக்கும் சிற்பிக்கே
கலை சொல்லித் தருகிறது
கூர் மழுங்கியதோர் சிற்றுளி.

கூறுகெட்ட உளியே உன்னை
சீர்படுத்திக்கொள் நீ முதலில்
பின்னர் வா பட்டறைக்குள்.

பட்டழுந்தியபின் புரியும் உனக்கு
சிலை வடிக்கும் அதிசிறந்த
கலையின் நுணுக்கம் எதுவென.

கைகளுக்குள் அடங்கியே தலையில்
அடிவாங்கு துள்ள நினைக்காதே
துவண்டு வீழ்ந்து விடுவாய்.

#நீலா

நட்பினைப் பழிக்காதேநட்புக்கு
ஆணென்ன பெண்ணென்ன
அதற்கேது வரம்பு?
எவரிடத்தில் எதிர் பால்
நட்பு இல்லை?
அதிலென்ன இழிவு கண்டீர்
எம் நட்பே?
ஒழுக்கமான நல் நட்பில்
தவறு இல்லை.


ஆண் பெண்ணிடமும் பெண்
ஆணிடமும் நட்பு கொள்வது
இழிவென்று எவர் சொன்னார்
மூடப்பிராணியே முட்டாள் மகனே

இனக் கவர்ச்சி இருக்குமடா
இரத்தத்தில் ஊறியது அது
சுத்தமாக பழகி விட்டால்
சுகமுண்டு நல்ல நட்பில்.

நட்பினைப் பழிக்காதே பாதகா
உன்னத உறவுடா மூர்க்கனே
புத்தியைத் தீட்டிக் கொள்ளடா
குதர்க்கமாய்ப் பேசாதே காமுகா.

மலர்களைச் சுவைக்க வட்டமிடும்
உனக்கது தெரிய வாய்ப்பில்லை
உனது பரம்பரைப் புத்தியினை
மூட்டைகட்டு முன்னேற வழிதேடு.

உன்னைப் போல் பிறரை எண்ணாதே.

‪#‎நீலா‬

அன்பான அம்முநீ என்னை அழைக்கும்

அன்பான அம்மு
செழுமையான செல்லம்
தயவான தங்கம்
குணமான குட்டி(மா)


இதமான இடியட்
சுகமான ஸ்டுபிட்
ரம்மியமான ராஸ்கல்
பாசமான ப்ளடி

நயமான நாய்
எழிலான எருமை
பண்பான பண்ணி
குணமான குரங்கு

கனிவான கழுதை
பதமான பக்கி
தெளிவான டேய்/டா/டி
பாங்கான பா

போன்ற இனிய
கொஞ்சல்களில்
கிறங்கிப் போகிறேன்
இன்பமே...!

‪#‎நீலா‬

எழுந்தாடுதடி என் உள்ளம்.கலகலக்கும் வளையோசைகளில்
சிலுசிலுக்குதடி என் தேகம்.
சிலுசிலுக்கும் கொலுசொலிகளில்
துடிதுடிக்குதடி என் மனமும்.


துடிதுடிக்கும் இதழ்ச்சுரங்களில்
படபடக்குதடி என் கண்கள்.
படபடக்கும் இமையலைகளில்
பரபரக்குதடி என் விரல்கள்.

பரபரக்கும் நடையழகினில்
பளபளக்குதடி என் விழிகள்.
பளபளக்கும் இடையசைவினில்
எழுந்தாடுதடி என் உள்ளம்.

‪#‎நீலா‬

நல் வாழ்த்துகள்.இருமனமொன்றி
ஒருமனமாகும்
திருமணமெனும்
ஆயிரங்காலப்பயிர்
தழைத்தோங்கட்டும்
இல்லறமெனும்
இன்பத்தோணியில்
அன்புத்துடுப்பெடுத்து
ஆசைக்கடலில்
காலமுழுவதும்
மகிழ்ச்சிப்பவனி
வர மனமுவந்த
நல் வாழ்த்துகள்.


‪#‎நீலா‬

சீண்டலும் தீண்டலும்எவரும் தீண்டவே யில்லை என்றெண்ணி
சீமைக் கருவேல மொன்றைச் சீண்டியதால்

கூரிய முட்கள்க் கிழித்துக் கீறிக்கொண்டேன்
எனக்கு நானே என்சொல்ல சீண்டியயென்


கரங்களுக்குச் சிறந்த பரிசாய்ச் செங்குருதியு
மதன் வேதனையுமாய்ச் சுமந்தே திரிகின்றேன்

தனிமைக் காட்டினிலே தவித்தே கிடக்கின்றேன்
வேண்டா மினியொரு சீண்டலும் தீண்டலும்

வேதனைக் கீறல்களும் வெதும்பித் திரிதலும்
வதங்கிய வாடல்களும் போதுமடா சாமியே!

‪#‎நீலா‬

கிறங்குவது நானல்லவா...!

உனக்கென்ன 
உதிர்த்துச்
சென்று விட்டாய்
உயிருருக்கும்
குறுநகையை...!

*

இரவு பகல்
அதையெண்ணி
உறங்காமல்க்
கிறங்குவது
நானல்லவா...!


#நீலா


பட்டும் படாமலும்

பட்டும்
படாமலும் 

*

தொட்டும்
தொடாமலும்

*

விலகியும்
விலகாமலும்

*

விரல்களும்
நெஞ்சமும்

*

நானும்
நீயும்

*

#நீலா


வெறுமையுடன்

கன்னியுனைக்
காணாதயென்
கண்களெலாம்
கண்ணீர்த் திவலைகளில் 

மூழ்கியே
முட்டுகின்றன
மூச்சிழுக்க
முயன்றும்

முடியாமல்
முடிவைத்தேடியே
முற்றாமலே
முதிரத்துடித்து

உதிரம் வற்றி
உறையாமலே
உரிமையற்ற
உரையாடலை

நெஞ்சில்
நிறுத்தி
இறக்கவும்
இயலாது

இறுக்கி்ய
உருக்கினை
பற்றிப்பிடித்த
சிமிட்டிக்காரைக்

குழம்பதன்
வலுவான
பிணைப்பிலே
விடுபட

முடியாத
கருங்கல்
சல்லிகள்
மணற்துகள்

போலவே
நாளும்
பொழுதும்
நகருகின்றன


வெறுமையுடன்

#நீலா


புருவச் சேட்டைஉனது
புருவச் சேட்டைகளில்

எனது
பருவம் தடுமாறுது


*

உனது
பருவ வளைவுகளில்

எனது
இளமை அலைமோதுது.

*

உனது
இளமை வனப்புகளில்

எனது
இதயம் திசைமாறுது

*

‪#‎நீலா‬

துடிக்குதே இளமனது.இன்னும் 
காயவில்லை
ஈர முத்தங்கள்..
உதடு கடித்து
ஊடல் கொண்டு..
நகம் பதித்து
நா வறண்டு ..
அள்ளி அணைத்து
ஆசையாய்த் தழுவி
மயங்கித்தான் போனேன்
மான் விழியாள் நான்...


வறண்டவுன் நாவினை
சுரந்தவென் உமிழால்
இதவெப்ப ஈரம்செய்து
மயங்கிய விழியிமைகளில்
சிறுமென் முத்தம்பதித்து
கிறங்கியே கிடக்கத்
துடிக்குதே இளமனது.

‪#‎நீலா‬

மடியில்வாடி கிளியே!மையலில் துடிக்கிறேனடியேய்
மஞ்சக் கிழங்கே!
மனமயக்கத்தைத் தீர்க்கவே
மடியில்வாடி கிளியே!


கொஞ்சியே பேசிடலாமடி
வஞ்சிக் கொடியே!
வாடலைப் போக்கிடலாமடி
கொவ்வைக் கனியே!

‪#‎நீலா‬

புத்தம்புதுத் துளிப்பா...!சப்தங்கள் முடங்கிய
யுத்தத்தில் முற்றிய

முத்தத்தின் வெற்றியில்
சிந்திய நல்முத்தினில்
விளைந்ததோர் இனிய
புத்தம்புதுத் துளிப்பா...!


‪#‎நீலா

சிவந்ததுவோ

உனது செவ்வதர 
நெருக்கத்தில் 

சிவந்ததுவோ
வெண்ரோஜா!

#நீலா

'உ'ரசி விட்டாள்மையெழுதாக் கண் சிமிட்டிக்
கையெழுதாக் கவி சொன்னாள்

மெய்யெழுத்தின் "ம்" கொண்டு
உயிரெழுத்தில் 'உ'ரசி விட்டாள்.


‪#‎நீலா

பருவங்கள் பசியாறட்டும்...!

செவ்வாய் தோசம் எனக்கு
செவ்விதழ்களின் ரசம் உனக்கு

பருகிச் சென்றுவிடு என்
தோசம் கழித்துவிடு நீ...!

சந்தோசம் அடைகிறேன் நான்
பருவங்கள் இன்பப் பசியாறட்டும்...!

#நீலா

உன் தந்தை வரி

மாதவிக்கோர் கானல் வரி
சீதைக்கோர் லட்சுமண வரி
அமராவதிக்கோர் திரை வரி
உனக்கோ உன் தந்தை வரி

பெண்கொடி நீ!தென்றல் தொட்ட நாணத்தினால்
அசைந்தாடும் பூங்கொடி போல்....

விரலுந்தன் இடையிலிட்ட கோலத்தினால்
வளைந்தாடும் பெண்கொடி நீ!


‪#‎நீலா‬

நெருக்கம் வேண்டியே!கண் விழித்ததும்
கன்னம் தந்து

என் இதழ்களால்
சின்னம் வரையச்
சொல்லும் உனது
ஆர்வத்தில் நான்
விழித்தும் இன்னும்
விழிக்காதது போல்
இமைகளை மூடியே
காத்துக் கிடக்கின்றேன்
கொலுசு ஒலிக்க நீ
அருகினில் வரும்
நெருக்கம் வேண்டியே!


‪#‎நீலா‬

Monday, June 29, 2015

நின்றன் பொற்றாமரைநின்றன் பொற்றாமரைக்
கன்னக் கதுப்பினிலே
காத்திருந்தேனடி நான்.

கார்குழல்த் தூரிகைகள்
இரவில் நீயுறங்குகையில்
வரைந்து களித்திருந்த


கோலச் சுவடுகளை
களவாடிச் சென்றே
வண்ணங்கள் தீட்டி

நான் களிக்க.....

‪#‎நீலா‬

வித்தை நானறியேன்மரபுக்கவி வடிக்கும் வித்தை நானறியேன்
மைவடித்த உனது கருவிழிகள் நானறிவேன்

மது அருந்தும் பழக்கம்தனை நானறியேன்
புதுக்கவி எழுதும் உத்திகளை நானறிவேன்


பெண்ணே நீயெனது போதையடி எப்பொழுதும்
கண்ணால் கலந்து விருந்திடடி முப்பொழுதும்.

‪#‎நீலா‬

என்னுதிரம் தித்திப்பதாய்..!வெல்லக்கட்டி உன்னைச்
செல்லமாய்க் கடித்த
எறும்பொன்று என்னையும்
மெல்லக் கடித்துச்
சென்றதனால்


என்னைக் கடித்த
கொசு ஒன்று
சொல்லிச் சென்றதடி
என்னுதிரம் அதிகம்
தித்திப்பதாய்..!

‪#‎நீலா‬

ஏழுநாளாக் காணலயேஎதிர்வீட்டுப் பெண்ணவளை ஏழுநாளாக் காணலயே
என்னாச்சோ ஏதாச்சோ எதுவுமே புரியலையே
புதிர்ப்போட்டுப் போனவளை விடைசொல்லத் தேடுறேனே
சதிராடும் என்மனதைப் புரியாமல் போய்ட்டாளே


குதிரைவால்ச் சடைபோட்டு குதித்துக்குதித்து நடப்பாளே
எதிரில்வந்து எம்மனசை உசுப்பேத்திச் செல்வாளே
பதராயிருந்த பாவியென்னை பதம்பாத்துப் போனாளே
வருவாளா மாட்டாளா வாசலிலே காத்திருக்கேன்.

‪#‎நீலா‬

என்னுயிரே வந்திடடி.வழங்கிய முத்தங்கள் இன்னும்
நெஞ்சில் இனிக்குதடி

அதன் சந்தங்கள் இன்னும்
செவியில் ஒலிக்குதடி


காதல் மட்டும் ஏனோ
காற்றோடு கலந்ததடி

அவ்வசந்தம் இனி வருமோ
நல்சுகந்தம் தருமோடி

ஏங்கித் தான் தவிக்கின்றேன்
என்னுயிரே வந்திடடி.

‪#‎நீலா‬

கண்ணால் நெஞ்சில்கண்ணால் நெஞ்சில்
பதிக்காதே...

கையால் முற்றத்தில்
கோலவிடு.


சொன்னால்க் கேளடி
பூமயிலே...
உன்னால்ப் புலம்புறேன்
தனிமையிலே.

‪#‎நீலா‬

ஈசல் நானடி..!அந்திக் கருக்கலில்
மிளிரும் ஒளிவிளக்கு நீயடி..!

சுற்றியே உயிர்விடத் 
துடிக்கும் ஈசல் நானடி..!


‪#‎நீலா

இளம் பேரெழிலே..!!!அங்குமிங்குமாய்ச் சிதறித்
தனித்தனியே ஒளிரும்

விண்மீன்களை நாம்
அழகாய் அடுக்கியொரு


அரண்மனை அமைத்துக்
களித்துத் துயிலுறங்கித்

திரும்பலாம் வாராயோ
இளம் பேரெழிலே..!!!

‪#‎நீலா‬

அரைக்காப்புடியே!எங்கக்கா பெத்த
அரைக்காப்புடியே!

நெளிஞ்சுபோன
சீனிட்டப்பாவே!


சப்பமூக்கி
கருவாச்சியே!

ஆள அசத்தும்
ஆசைக்குரங்கே!

குட்டப்பாவாடக்
குட்டிப்பிசாசே!

ஓட்டைப்பல்லு
சிங்காரியே!

அக்கினிக்குஞ்சா
நெஞ்சை உருக்குறியே..!

‪#‎நீலா‬

இளங்கலைஞன் நான்...!!!விழியோடு மொழிபேசி
மனதோடு உறவாடி

செவிமடலில் சுரம்சேர்த்து
கன்னமதில் மெட்டெடுத்து


இதழோரம் இசைபாடும்
இளங்கலைஞன் நான்...!!!

‪#‎நீலா

நல்லவளே நீயேயடி

செல்லமாக என் கன்னம்
தட்டிச் சென்ற செந்தாமரையே

வெல்லமாக இனிக்குதடி இளமனது
வெள்ளமாக ஊற்றெடுக்குதடி இளமை

நல்லவளே நீயேயடி என்ஜோடி
வல்லவளே நீவாடி வாயாடி.

‪#‎நீலா

சின்னப் பூவேசின்னப் பூவே
நீயென் எண்ணந்தனிலே
நிறைந்திருக்கிறாய்...!

*


என்றும் உன்னை
என் கண்ணைப் போலவே
காத்திருப்பேனே...!

*

வண்ணம் கொண்ட
பட்டாம் பூச்சியாய்
மகிழ்ந்திருப்போமே...!

*

சுகந்தம் தாங்கிய
வசந்தம் நோக்கியே
பறந்திருப்போமே...!

*

இன்பம் யாவையும்
அள்ளிச் சுவைத்தே
இணைந்திருப்போமே...!

*
‪#‎நீலா‬

இருட்டில் உலவாதே

அடிப்பென்ணே...!
இருட்டில் உலவாதே
கண்மணியே!

உன் விழி பார்த்த
பொறாமையால் மின்மினிகள்
வெளியேவரத் தயங்குகின்றன.


‪#‎நீலா

தனிப்பயிற்சிகண்ணாண கண்மணியே உன்
கையோடு கைச்சேர்த்து நாம்
நடைப்பயிற்சி செய்யலாம் வா...!

நடைப்பயிற்சி செய்கையிலே உன்
இடைப்பயிற்சி செய்வதை என்
விழிபார்த்து நான் ரசிக்க...


விழிகளும் இடவலம் உருண்டோடி
தனிப்பயிற்சி எடுத்திடுமே கலைமானே
என் இனியவளே எழிற்சிலையே...!

தனிப்பயிற்சி எடுக்கையிலே உன்
விழிபேசும் தொனி உணர்ந்து
மொழிப்பயிற்சி பெற்றிடுமே என்மனது,

மொழிபயின்ற மனதினிலே இனிவரும்
என்னெழுத் தெல்லாம் உனதழகைப்
புனைந்தே நற்கவிப்பயிற்சி அடைந்திடுமே...!

‪#‎நீலா‬

எந்தனையே ஈர்த்துவிட்டாள்சிறிது நேரம்தான்
பேசினாள் என்றாலும்
சிந்தனையில் கலந்து
எந்தனையே ஈர்த்துவிட்டாள்.


ஏனிந்தப் ப்ரவாகம்?
என்னைப்போல் அவளும்
என்பதாலோ தன்னாலே
எண்ணத்தில் புகுந்தாளோ!

‪#‎நீலா

வெட்கம்நிறைக் கன்னங்கள்.செவ்வண்ணப் பிறப்பெடுத்து
இளமஞ்சள் நிறம்மாறி
பொன்வண்ணம் கொண்டதுவோ
வெட்கம்நிறைக் கன்னங்கள்...!!!


‪#‎நீலா

என் மனக்கணக்குஉனக்கான

என் மனக்கணக்கு

கூட்டலும்


பெருக்கலுமாகவே

வளர்ந்து

கொண்டிருக்கிறது

தொடர்வட்டி

விகிதத்தில்...

‪#‎நீலா‬

சிரிக்காதே சித்திரமேசிரிக்காதே சித்திரமே - என்
சிந்தனையும் சிதறுதடி.

தலைகவிழாதே மயிலே -என்
நிலையும்தான் குலையுதடி.


கண்சிமிட்டிக் கண்சிமிட்டி -என்
தேகந்தனைச் சீண்டாதே.

போதுமடி விளையாட்டு - நீ
இத்தோடு நிறுத்திக்கொள்.

பொங்குதடி இளநெஞ்சம் -அது
பஞ்சாகப் பறக்குதடி.

‪#‎நீலா‬

முறைப்பொண்ணு பூத்திருக்கமுறைப்பொண்ணு பூத்திருக்க
பருவம்கொண்டு பார்த்திருக்க

விருப்பத்தோடு காத்திருக்க
ஒருமுறையும்.தோன்றாமல்
இருவிழியும் காணாமல்
மறுமொழியும் பேசாமல்
உறங்கலாமோ சின்னராசா!


‪#‎நீலா‬

கவிதை எழுத நினைத்தால்கவிதை எழுத நினைத்தால்
கருவிழி வருகுது முன்னால்
கார்குழல் பறக்குது தன்னால்
கட்டிப் போட்டாள் கண்ணால்.


எந்தன் கவிதைப் பெண்ணாள்
என்றும் அவளால் பொன்னாள்
இனிய கன்னல் மொழியாள்
இவளே காதல்க் கனியாள்.

‪#‎நீலா‬

மனதை நீ தொட்டுஎன் மனதை நீ தொட்டுத்
தொடர்வ தென்னவோ உண்மைதான்
உன் மனதை நான் தொட
நினைப்பதும் புரியவில்லையா இல்லை
புரிந்தும் புரியாதவளாய் நடிக்கின்றாயா.


பெண்ணின் மனதைத் தொட்டு
நான் காதல்கொள்ள விரும்புவது
தவறா, அதற்கு அருகதை இல்லையா?

‪#‎நீலா‬

இனிமை புதுமை இளமை

ன்னைப் பற்றிக் கவிதை
சொல்லவா என்றாள் அவள்.

என்னைப் பற்றாமல்ச் சொன்னால்
இனிமை அதை ரசிப்பேன்.


கையைப் பற்றிச் சொன்னால்
புதுமை அதை மகிழ்வேன்.

தோளைப் பற்றிச் சொன்னால்
இளமை அதை உணர்வேன்.

பற்றியும் பற்றாமலும் சொன்னால்
இனிமை புதுமை இளமை.

‪#‎நீலா‬

கவிக்கொரு அரசன் அவன்தானேகவிக்கொரு அரசன் அவன்தானே
புவிக்குநற் புலவனு மவன்தானே

தமிழை அவன்தான் ஆண்டானே
தமிழே தானென வாழ்ந்தானே


தமிழுக்கே தனையும் ஈந்தானே
தமிழால் எமையும் ஈர்த்தானே

கனியாய்க் கவிகள் புனைந்தானே
சுவையாய் எம்மில் இனித்தானே

எங்கே நிம்மதி என்றேதேடி
அங்கோர் இடமும் கண்டானே.

ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
அவன்புகழ் இங்கே மங்காது

அவனுக்கு அழிவும் இங்கில்லை
அவனால் செந்தமிழ் மணக்கிறதே!

வாழிய எங்கள்க் கவியரசே!
வாழிய மங்காச் செந்தமிழே!

‪#‎நீலா‬

கவிக்கொரு கருவும் அவள் தானேஎன் கவிக்கொரு கருவும் அவள் தானே
பண் இசைக்கும் குயிலும் அவள் தானே
நடை தவழும் தமிழினி யவள் தானே
எனை ஆளும் இனிமையு மவள் தானே


நற் கனிவாய் எனையே ஈர்த்தவள் தான்
சொற் சுவையால் என்னில் இனித்தவள் தான்
மனம் நிம்மதி கொள்ளலும் அவளால் தான்
தினம் சன்னதிச் சங்கீதம் அவளிடம் தான்

இனி ஆயிரம் பிறப்புகள் நான் அடைந்தாலும்
கனி அவள் மடியினில் என் அடைக்கலமே
விண்ணில் சென்று நான் உறைந்து விட்டாலும்
என்னில் தாங்கி சுகமாய் என்றும் சுமப்பேனே.

‪#‎நீலா‬

பழரச இதழழகா?உன் பழரச இதழழகா?
அதில் தவழும் தமிழழகா?

கனிரசத் தமிழ் மொழியினைப்
பிழிந்தூட்டும் சேல் விழியாளே!


எழிலாளே! ஒயிலாளே! மயிலாளே!
உன்னில் மயங்கிக் கிறங்குகின்றேனடி.

போதை ஒழிப்பு தினமாம்...!!!
முடியுமா என்னால் சொல்லடியே!

‪#‎நீலா‬

இளமஞ்சள் வெயில்இளமஞ்சள் வெயில் கொண்ட
பொன்மாலைப் பொழு தொன்றில்
கலைரசிக்கும் ஆவலில் நான்
மலர்ச்சோலை தனை யடைந்தேன்,


பொற்சிலைப் போலும் எழிலொன்று
தலைகுனிந் தெனைக் கடக்கையிலே
சேல்விழி யோரக் கணையாலே
செவ்வித ழோர நகையோடு

இளநெஞ்சில் வீசிச் சென்ற
மின்னல்ப் போல்த் தாக்குதலில்
நிலைக் குலைந்துச் சிலையானவன்
நானல்லவோ நீயறியாய்ப் பேரழகே!

‪#‎நீலா‬

‎ஹைக்கூ‬‪#‎ஹைக்கூ‬

நீலமேக வண்ணனைச்
சுற்றித் திரிகின்றாள் மீரா.
குழலிசைக் கேட்கவே.


*

குயில்கள் கூவும்.
உயரத்தில் பறந்தே
ஹைக்கூ ஹைக்கூவென.

*

நறுக்கப்படுகின்றன
கத்தியால் வெங்காயங்கள்.
அழுகின்றன கண்கள்.

*

மின்சாரத் தடைகளில்
இன்றும் சலசலக்கின்றன.
பனை விசிறிகள்.

*

இரவு மங்கைக்கு
விடியும் வரைக் காவல்களாம்.
இராக்கோழிகள்.

*

‪#‎நீலா‬

இன்றெனக்குக் கவிவிருந்தே!செண்பகப் பூக்கள் செழித்து மலர்ந்ததோர்
தீர்த்தக் குளக்கரையில் மேல்வானம் மெல்லச்
செங்கதிரொளி இதமாய்ப் பாய்ச்சிடும் மாலைப்
பொழுதினில் மையல் கொண்டே நானமர்ந்து


எண்ணச் சிறகுகளை விண்ணில் பறக்கவிட்டு
வண்ணக் கவிதைதனை வரையவே கருதேடி
சிந்தனை மிகுந்திடவே எண்ணி இருக்குங்கால்
வந்தனள் ஓரெழில் மங்கையென் கண்முன்னே

எந்தனை நோக்கவில்லை தன்துணை எவருமில்லை
வந்தவள் குளமிறங்கி பொன்மேனி நீராடுமழகினிலே
என்னுள் உருவானதே நற்றமிழ்க் கவிக்கருக்கள்
ஒன்றல்ல ஓராயிரம் இன்றெனக்குக் கவிவிருந்தே!

‪#‎நீலா

திருட்டுக் கருவாச்சி...!ஏய்...!
திருட்டுக் கருவாச்சி...!

ஒழுங்காக என்னிடம் இருந்து
திருடிக்கொண்டு போன எல்லாவற்றையும்
திருப்பிக் கொண்டுவந்து அதே இடத்தில்
பத்திரமாக வைத்துவிட்டுச் செல்லடி...


இங்கே என்னுடல்
இதயம் இழந்து கிடப்பதால்
இயங்க மறுக்கிறதடி...!

‪#‎நீலா‬