Tuesday, June 15, 2010

புத்தகப்புழுவாய் மாறிவிட்டேன்

புத்தகப்புழுவாய் மாறிவிட்டேன்
முகப் புத்தகப்புழுவாய் மாறி விட்டேன்

நித்தமும் உந்தன் பக்கங்களில் நான்
சித்திரமாய் எனைப் பதித்துக் கொண்டேன்

நித்திரை மொத்தமும் மறந்து விட்டேன்
சுத்தமாய் சாப்பிட மறுத்து விட்டேன்

சத்தமில்லாமல் சன்னதி நீயென இருந்து விட்டேன்
சித்தமெல்லமுன் ரத்தம் பாய்ந்திட சமைந்து விட்டேன்

சுற்றங்கள் யாவையும் நீயே தான்
சொந்தங்கள் எல்லாம் நீயே தான்

உத்திரம் பார்த்தால் உன் வடிவம்
சத்தியம் சொல்கிறேன் புத்தகமே

சங்கதியெல்லாம் புத்துணர்வு
உன்கதியே என் சத்துணவு

தொற்றிக் கொண்டது புத்தக வியாதி
முற்றியும் விட்டது இத்தள மோகம்

கற்ற வித்தயை கொட்டித் தீர்க்கிறேன்
பெற்ற புத்தியை பகிர்ந்து கொள்கிறேன்

புதிதாய் பலப்பல தெரிந்து வருகிறேன்
தெரிந்த செய்தியை வழங்கி மகிழ்கிறேன்

அறிந்தும் உன்னுள் முடங்கிக் கிடக்கிறேன்
அடியேன் உனைவிட்டோட வழியும் தேடினேன்

அறியாமல் தவிக்கிறேன் வியாதி கொண்டே
அறிந்தவர்கள் சொல்லுங்கள் மருந்து என்ன?

விடிந்தது முதல் அடைவது வரை
உன் மடிமேல் கிடக்கிறேன் பொழுதெல்லாம்

குறைத்துக் கொள்ளவும் கட்டுப்படுத்தவும்
குனவான்கள் நீங்கள் குறி சொல்லுங்கள்

நோயாளி என்னை நேராக்குங்கள்
சீக்காளி என்னை சீராக்குங்கள்.

புத்தகப்புழுவாய் மாறிவிட்டேன்
முகப் புத்தகப்புழுவாய் மாறி விட்டேன்

Sunday, June 13, 2010

கடவுச் சொல்

முகம் நோக்கி மெல்ல நகும்
உன் ஒளிவீச்சை கடந்து செல்ல
நினைக்கையிலே கடவுச்சொல்
கேட்கிறது உன் காந்த கண்கள்


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

செல் பேசியே கொஞ்சம் பேசிச் செல்

செல் பேசியே கொஞ்சம் பேசிச் செல்.
------------------------------------------------------
யார் அழைத்தாலும் இசைக்கிறாய்
யான் அழைத்தாலும் இசைகிறாய்.

இரு துருவங்களையும் இணைக்கிறாய்
இரு உள்ளங்களிலும் தொனிக்கிறாய்

உலகம் எல்லாம் ஊடுருவி
உன்னத சேவை செய்கின்றாய்

நீயில்லாத இடமில்லை
உன் உறவில்லாத நபரில்லை

ஒரு கணம் உன் செயல் நின்றிட்டால்
மறு கணம் மனிதனும் செயலிழப்பான்.

காதலர் கைகளில் தூதுவன் நீ
காவலர் கைகளில் சேவகன் நீ

பாவலர் கைகளில் பறவை நீ
ஆர்வலர் கைகளில் ஆற்றல் நீ

மாணவர் பைகளில் ஆட்டம் நீ
மங்கையர் கைப்பையில் மதுரம் நீ

அரசியல் வாதியின் அடியாள் நீ
மருத்துவர் வாசலின் உதவியும் நீ

போதகர் மேசையில் புத்தகம் நீ
பாதகர் உறைகளில் குந்தகம் நீ

விற்பன்னர் மனங்களில் வித்தகன் நீ
விளம்பரம் ஊடகம் உருவம் நீ

விஞ்ஞானி விரல்களில் வேதியும் நீ
அஞ்ஞானி கருத்தினில் அகந்தை நீ

எல்லோர் வாழ்விலும் உயிராய் நீ
எல்லை இல்லா நட்பாய் நீ

உன் கருவில் எத்தனை எண் கணிதம்
உன் செயலில் எத்தனை தனி வினோதம்.


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

சம்மதம்

மென்மையை உணர்ந்தேன்
உன் கண்ணிமையில்,
தன்மையை புரிந்தேன்
சிறு கண்ணசைவில்.
என்வசமிழந்தேன்
குரும்புன்னகையில்
உன் சம்மதம் அறிந்தேன்
கால்விரல் வரைவில்.

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

முகம் புது யுகம்

முகம் புது யுகம்
உன் புயம் தனி சுகம்

சொல் நயம் மெல்லினம்
உன் வயம் நான் தினம்

நடை சுதி லயம்
உன் இடை கொடி மயம்

உடை மலர் வனம்
உன் படை கண் நயனம்

சிகை நதி அலை
உன் நகை புன்னகை

இதழ் மது ரசம்
உன் கதழ் நாசாக்கிரம்

இமை கருந் தூரிகை
உன் சுமை நல் லிளமை

செவி சிறு மடல்
உன் கவி செந் தமிழ்

தேகம் செம் பவளம்
உன் சினேகம் என் யோகம்.

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

கலங்கரை விளக்கமோ

உன் முகமென்ன என் மனக்கப்பலின் கலங்கரை விளக்கமோ!,
நீ திரும்பும் திசையெல்லாம் நானும் அசைகின்றேன்,
ஒளிக்கற்றை சுழலும் வழியெல்லாம் என் மனமும் செல்கிறது,
அலைகழிக்க நினைத்தாயோ இல்லை அரவணைக்க முயன்றாயோ!.


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

.நொறுங்கேன் நான்

முகம் குறுக்காய் உடைந்தாலும்
அகம் நேராய்க் கிழிந்தாலும்
தோள்கள் தெறித்தாலும்
கால்கள் வெடித்தாலும்

சித்தம் சிதைந்தாலும்
இரத்தம் உறைந்தாலும்
என் தமிழினம் ஓங்காமல்
நான் நொறுங்க மாட்டேன்.

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

மலர்மேல் பனித்துளி

இச்சை இதழ்களை எச்சில் படுத்தி
கொச்சையாக்கி இம்சை செய்தீரோ
குளிர் மேகங்களே!

இளவெப்ப இதம் தாளாமல்
பவளம் போல் வியர்த்தது காண்
பால்வண்ண மேனியெல்லாம்


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

விரிசல்கள்

கல்லோடு கல்லாக
கலந்துவிட்ட கோமானே!
நீ பிழைசெய்து பதித்தாரோ!,
இல்லை
சாகா வரம் வேண்டி
தவம் செய்து சமைந்தாயோ!

உலகத் தமிழர்கள்
சிதரல்கள் ஒருங்கிணைக்க
சித்தம் உறைத்தாயோ!
இல்லை
எம்பெண்டிர் கதறல்கள்
ஓலங்கள் கேட்டுறைந்தாயோ!

உன்னெஞ்சின் விரிசல்கள்
உணர்கின்றோம் மாமனிதா,
எண்ணக் கனவெல்லாம்
வண்ணக் கோலங்களாய்
மனம்போல் ஈடேறும் .

விரிசல்கள் கூடிவிடும்
விரைவாக மாறிவிடும்.


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

முக மண்டபம்

முகம் பளிங்குப் பொன்மணி மண்டபம்,
கருவிழிகள் இரு வாயிற் தோரணங்கள்,
சென்னாசி மென்பஞ்சு மலர் மஞ்சம்,
வெண்முத்துப் பற்கள் நல் விளக்ககல்கள்,
கோவைச் செவ்விதழ் மொழிகள் பாசுரங்கள்,
செவ்வரியோடும் செவியிரண்டும் சாளரங்கள்,
பவளச் செங்கன்னங்கள் முத்திரை சின்னங்கள்,
அலையாடும் கருங்கூந்தல் தனிக்காவலர்கள்,
நடுனேர் வகிடுன் அந்தப்புறம் செல்வழிப்பாதை,
முன்னெற்றி இளங்காற்றின் சுகவுப்பரிகை,
இவ்வெழில் கொஞ்சும் வடிவெல்லாம் ஏனடியோ!,
என்மனமதில் தேன்கணை பாய்ச்சும் சோதனையோ!


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

முகமொரு கண்ணாடி

முகமொரு கண்ணாடி
அகப்பொருள் நுகர்ந்து
வெளிக்கொணரும் நம்

முகமொரு கண்ணாடி.

இன்பன் துன்பம்
ஏக்கம் தாக்கம்
வியூகம் தாகம்
சிந்தனை வஞ்சனை

எத்தனை உத்திகள்
சத்தம் அடங்கியே
பதுக்கம் நம்முள்
அத்தனை எண்ணமும்

மோப்பம் பிடித்து
முகத்தில் ஒளிரும்
அகத்தின் அலைகள்
முகத்தில் ஒளிக்கும்

சட்டியுள் சோற்றை
அகப்பையில் கோரும்
மனம்மறைத்த வர்ணம்
உனையுணர்த்தும் முன்னம்

முகமொரு கண்ணாடி
நம் முகமொரு கண்ணாடி


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

என் வீட்டுத் தோட்டம்.

என் வீட்டுத் தோட்டம்.

என் வீட்டுத் தோட்டத்தில்
சின்னஞ்சிறு கூட்டங்களாய்
மென் தளிர்கள் மெல்ல நகும்
கண் களிக்கும் மனம் குளிக்கும்

வண்ண வண்ணக் கோலங்களாய்
வானவில்லின் ஜாலங்களாய்
மணம் பரப்பும் நறு மலர்கள்
கானம் பாடும் சிறு கவிகள்.

மாலையிலும் அதி காலையிலும்
மலர் மேலும் பனித்துளி மீதும்
மனம் கவரும் கொடிதனிலும்
சிறகடித்து வட்டமிடும்

வண்ணத்து பூச்சிகளின்
வனப்பை நான் களிக்கையிலே
இனமறியாப் பேரின்பம்
எனக்குள்ளே எழுந்திடுமே

பட்டுப்போல் பறந்தோடி
மெட்டுக்கள் பலபாடி
சிட்டுக்கள் சிரித்தாடி
தட்டும் என் மனக்கதவை

சிட்டுக்களின் மெட்டொலியை
கேட்டுப் பல நாளாச்சு
காணக் கிடைக்கா அக் காட்சியினை
மறுமுறை நான் காண்பதெப்போ!

இளவெயில் நேரத்தில்
முன்பகலும் பின்ப்கலும்
புல்வெளிப் பரப்பினிலே
தாவிக் குதிக்கும் வெட்டுக்கிளி
கிட்டப் போய் உள்ளங்கையில்

பொத்திப் பிடிக்க உட்கார்ந்தால்
பட்டென்று குதித்தோடும்
பாங்கினை என்சொல்வேன்.
பரவசத்தை என்னென்பேன்.

வெட்டுக்கிளி ஒருபக்கம்
தத்தித்திரியும் அணிற்பிள்ளை
அதனினும் இனிய ஆனந்தம்
காலால் குதிப்பா வாலால் குதிப்பா

அறியும் ஆர்வத்தில் அருகில் சென்றால்
அறியாச் சிறுமியாய் அழகாய் ஓடும்.
கொறிக்கக் கொடுத்தால் இதமாய் பொருக்கி
பதமாய் கடிக்கும் பவ்யம் பேரின்பம்.

முன்னே செல்லவா இல்லை
பின்னே செல்லவா என தவித்தபடி
ஒல்லிக் குச்சியாய் முடிவில்லாமல்
துள்ளிப் பறக்கும் தட்டான் பூச்சிகள்

சாரை சாரையாய் உணவை ஏந்தி
ஊர்ந்து செல்லும் சித்தெரும்புகள்
கடமையே கருமமாய் தமக்கே
உடமை இவ்வழி என்று அவ்வழி

சீருடை அணிந்த பள்ளிச் சிரார்கள் போல்
சீராய் செல்லும் கருத்தை என் நெஞ்சில்
பதித்த பக்குவம் இன்னும் மனதில்
நிருத்தி நடக்கிறேன் ஒழுக்க சீலனாய்.

செடி கொடிகள் மட்டுமன்றி
செழிப்பாய் ஒரு மாமரமும்
செங்காய்கள் கனிகள் தந்து
செவ்வனே நிழலும் தந்து

வெயில் நாளில் இளைப்பாற
மழை நாளில் குடையாக
மனமெல்லாம் சுகம்தேட
மௌனமாய் உரையாட

நல்னண்பன் நானிருக்க
நாளெல்லாம் எனக்காக
தவமிருக்கும் கற்கண்டு
தனியாளாய் பல்லாண்டு.

பல்லின்பம் பகிர்ந்து அளித்து
மனமகிழ்ந்த சிறிய சிங்காரம்
என் வீட்டுத் தோட்டம்.
எழில் சிந்தும் தோட்டம்.


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

தமிழ் மரம்

காய்ந்தாலும் ஓய மாட்டேன்,
ஓய்ந்தாலும் சாய மாட்டேன்,
சாகா வரம் பெற்றேன்,
எனக்கில்லை மனக்கவலை,

எழுச்சியுண்டு எனக்குள்ளே,
தளிர்த்து நிற்பேன் தரணியிலே,
தனியாய் நின்றாலும்,
தளர மாட்டேன் தமிழ் மகனே,

தாவிடுவேன் வானம் வரை,
கூவிடுவேன் வெல்லும் வரை.
"வாழ்க தமிழ்!"
"வெல்க தமிழ்!"

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

விடியும்வரைக் காத்திரு

வானத்து விடிவெள்ளி
வழிமேல் விழிவைத்து
என்வரவை எதிர்னோக்கி
மணிகணக்காய் காத்திருந்தும்
நான் போக மறந்து விட்டேன்.

கண்ணே உன் கண்ணுக்குள்
நுழந்து விட்டால் என் கண்ணிமையும்
மறக்குதடி உறக்கத்தை
மறுநாள் உனக்காண
கண்ணுறக்கம் வேண்டாமோ!

செல்கின்றேன் துணையுறங்க
உனைப்பிரிய மனமின்றி
என் முகனூலே வருவேன் உன்
விழி தேடி மொழி பயில
விடியும்வரக் காத்திரு.


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

வீட்டுப் பாடம்..

"யாரெல்லாம் வீட்டுப்பாடம் எழுதிட்டு வரல?
எந்திரிச்சு நில்லுங்க.
ஹும்...! சீக்கிரம்...!"

முருகன், குருசாமி, லட்சுமி..!
முணு பேரா..!

"டேய் முருகா..! எண்டா எழுதல?""

"சார் எங்க வீட்டுல நேத்து கரண்டு இல்ல சார்."

"ராத்திரி தான கரண்டு வேணும் சாய்ங்காலம் என்ன செஞ்ச?"

"சார் நான் வீட்டுக்கு போம்போது வீடு பூட்டி இருந்துச்சு சார்,
எங்கம்மாவ காணும் சார், அவா ஆறு கருக்கல்ல தான் சார் வந்தா."

"இந்த நொண்டி சாக்கெல்லாம் சொல்லாத படுவா,
உன்னப் பத்தி தெரியும் எனக்கு.
ஒழுங்கா நாளைக்கு வரும்போது இன்னைக்கும் சேத்து
மொத்தமா எழுதிட்டு வரணும் புரிஞ்சுதா,
இண்ணைக்கு உனக்கு மாப்பு, போடா."

"டேய் குருசாமி..! உனக்கென்னடா ஆச்சி..!
உங்கம்மா சினிமாக்கு போய்ட்டாளா?"

"இல்ல சார், அது வந்து சார்.."
"என்னடா வந்து, போயி.."

"அது வந்து சார், எங்கப்பாவ நாயி கடிச்சிட்டுது சார்.."

"டேய்..! என்னடா சொல்ற.."

"ஆமா.., சார்..எங்கப்பா கொல்லப் பக்கம் போனாரா..?
அங்க ஒரு நாயி குட்டி போட்டுட்டு படுத்திருந்துச்சா..?
இவரு உக்காந்த உடன லொள்ளுன்னு கொலச்சிட்டு
வேகமா வந்து கால்ல கடிசிருச்சி சார்.., அதான் வைதியர் கிட்ட போயிட்டு வர நேரமாயிருச்கி சார்.."

"என்னடா கத விடுற..? எதாவது சொல்லி தப்பிச்சிருவியே தெனமும்,
அதெல்லாம் தெரியாது, இண்ணைக்கு தப்பிக்க முடியாது,
இங்க மேசை பக்கதில வந்து ஒரு மணி நேரம் முட்டங்கால் போடு,
அப்பந்தான் நீ சரியா வருவ"

"ஏய்.. லட்சுமி..! உனக்கென்ன..? உங்க பாட்டி மண்டய போட்டுட்டாளா..?

"இல்ல சார்..! எங்க பாப்பா அழுத்க்கிட்டே இருந்தாளா.., அதுக்கு எங்கம்மா.."

" என்ன ஒங்கம்மா.., நொங்கம்மா.., ஓங்கி விட்டேன்னா..!"

"சார்.. அடிக்காதீங்க சார்.., நான் சொல்றது நெசம் சார்..கேளுங்க சார்..."

' சரி.. சொல்லு சீக்கிரம்.., உங்க குடும்ப கத எல்லாம் கேட்டுட்டே இருந்தா எப்ப பாடம் நடத்துறது..?"

"எங்க பாப்பா அழுதுக்கிட்டே இருந்தாளா, எங்கம்மா எங்கிட்ட பாப்பாவ பாத்துக்கோ..
நான் போயி கெணத்துல தண்ணி எடுத்துட்டு வாரேன்னு சொல்லிட்டு போனாங்களா..
ஏழு மணிக்கு தான் சார் வந்தாங்க.. அதான் எழுதிட்டு வரல சார்.."

"உன்ன இப்படியே விட்டா சரிப்பட்டு வர மாட்டே.., கிரவுண்டுக்கு போயி பத்து ரவுண்டு அடிச்சிட்டு வா..! ஆள விட்டு எண்ணிக்கிட்டே இருப்பேன். ஏமாத்தினியோ..! கால்ல கயித்த கட்டி தல கீழ தொங்க விட்டுருவேன். ஒடு.."

"டேய்.. எல்லாரும் கேட்டுக்கோங்க. யாராவது இனிமே வீட்டுப்பாடம் எழுதாம வந்தா.., இங்க மணலப் போட்டு அது மேல ஒரு மணி நேரம் முட்டங்கால் போட விட்டுருவேன். புரிஞ்சிதா..?


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

நெல்லுச் சோறு

காலையில் பழைய கம்பங்களி, பச்சை மிளகாய்
மதியம் கேப்பைக்கூழ் ஊறவைத்த அகத்திக்கீரை
இரவு குதிரைவேலி கருங்காணத் துவையல்

இடையிடையே சாமை, வெண்சோளம்
இதுதான் எங்கள் தினசரி ஆகாரம்
இப்படியே கழிந்ததெங்கள் இளம்பருவம்.

எப்போ வரும் அமாவாசை என்ற ஏக்கம் எப்போதும்
எதற்கென்று தெரியுமா? அன்றுதான் விரதம்.
என்ன விரதம் ஏன் விரதம் என்றெல்லாம் தெரியாது.

தெரிந்ததெல்லாம் ஒன்றெ ஒன்று
அன்று தான் காலையில் இட்லி,தோசை
அன்றிரவில் மட்டும் தான் நெல்லுச் சோறு.

தட்டம் நிறைய சூடான மல்லிப்பூ நெல்லுச்சோறு
கிட்ட குனிந்து மணம் பிடிப்போம் மனம் நிறைய சுகம் பெருவோம்
பளிச்சென்ற வெண்முத்து சிறுமணிகள் சிரிக்கின்ற அழகென் சொல்ல.

தெருவெங்கும் அழைப்பு சொல்லும் மஞ்சப்பாறை
கருவாட்டுக் குளம்பு கூட்டி குனிந்ததலை நிமிராமல்
ஒரே மூச்சில் உள்வாங்கி அடுத்த முறை எதிர்பார்த்து

ஆவலோடு அமர்ந்திருக்கும் முகம்கண்டு அம்மாவும்
ஆரஅமர தின்னு ராசா விக்கல் சிக்கல் வந்துவிடும்
என்ருரைத்து பறிமாறும் நினைவு இன்னும் நெஞ்சினிலே.

பொத்தானில்லா கால்சட்டை மீது சுற்றிய
அரைஞாண் கயிறு அறுத்துத் தெரிக்கும் அளவுக்கு
வயிருமுட்ட உண்டுவிட்டு எந்திரிக்க முடியாமல்

விழிபிதுங்க முழித்துக் கொண்டு உட்கார்ந்த
அழ்கு கண்டு அன்னை என் கைபிடித்து தூக்கிவிட்ட
எழில் எல்லாம் எளிதில் தான் மறந்திடுமோ!

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

மழைத்தூறல்


மலையடிவாரம் மழைத்தூறல் போடும்
மனதுக்குள் ஈரம் மௌனமாய்ப் பேசும்

தூரலுடன் சாரல் சன்னமாய் சிதரும்
சிதரிய துளிகள் செல்லமாய்த் தீண்டும்

துளிகளின் தீண்டல் மேனியை வருடும்
முகத்தில் படர்ந்து முத்தமாய் சிந்தும்.

விரலால் தடவி மெல்ல நீக்கியும்
திரும்ப திரும்ப அதையே நாடும்

முகத்தை உயர்த்தி முழுவதும் ஏற்கும்
நாவை நீட்டி சுவையும் தேடும்

தேகம் நனைந்தும் நேசம் நெருங்கும்
ஆடை குளிந்தும் ஆசைகள் பொங்கும்

தாய் வைதாலும் அசட்டை செய்யும்
தந்தை முறைத்தாலும் பதுங்கிச் சீரும்

ஜுரம் அடித்தாலும் ஜலதோசம் வந்தாலும்
நாளையும் செய்யும் இதையே மனம்.

வர்ணம் செய்யும் இந்திர மாயம்
எவரையும் ஈர்க்கும் இன்ப ஜாலம்.


என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

சித்திரைக் கத்தரி

சித்திரைக் கத்திரியில்
உத்திரம் வேகுதடி
உதிரம் கொதிக்குதடி
மதுரம் புளிக்குதடி

தேகம் வேர்க்குதடி
வேசம் நனையுதடி
சுவாசம் பெருகுதடி
நேசம் நொருங்குதடி

பாசம் போனதடி
சுகவாசம் தொலைந்ததடி
தலைக் கவசம் உருகுதடி
சிலைகூட இளகுதடி

நீரும் மணக்குதடி
மோரும் இனிக்குதடி
பழங்கஞ்சி ருசிக்குதடி
இளங்காற்றைத் தேடுதடி


பிழைப்பு போனதடி
மழைக்கு ஏங்குதடி
துணிச்சல் பறந்ததடி
விளைச்சல் வேண்டுமடி.

வானம் பொய்த்ததடி
தூவானம் வருமோடி
செவ்வானம் சாயுதடி
நல்கானம் பாடுதடி

வெண்மேகம் கருக்குதடி
கோடையிடி இடிக்குதடி
வர்ணம் பொழியுமடி
வெள்ளம் வரும் ஓடி


என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

பட்டுப்புழு

இழைக்காக தழையில் தவழும்

புழுவை அழித்து தீங்கிழைப்பது பாங்கோ?

(பட்டுப் புழு - பட்டுத் துணி)


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

பாசம்

உனக்குள் உதித்து உரைந்து
உறங்கிக் கொண்டிருக்கிறது
உன்னை உணர்ந்து.
நீ கண் விழித்தால் பொங்கி எழும்.
கண்களைத் திறந்து உறங்காதே
மெல்ல விழித்து அழைத்துப்ப பார்
உன் கண் வழியே உருகி வரும் அந்த உரைகல்.
பாசம் உன் பாசறைக்குள்
பாசம் பிடித்து படர்ந்திருக்கிறது,
ஒரு நுனியை மெதுவாய் பிடித்து இழுத்துப்பார்,
மொத்தமாய் எழுந்திரிக்கும் முத்தமாய்.

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

தானே தந்தானே

தானே தந்தானே!

தாளத்தின் சத்தத்தை ரசித்த கோமானே!
அதன் உள்ளே புகுந்து தோண்டிப்பார்,
சந்தம் புரியும்.
அர்த்தம் விளங்கும்.

சொல்லணுமா விளக்கம்
அவனே அனைத்தையும் அளித்தானே.

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

இரவின் உறவு

இரவுக்குத் தெரியுமா உறவின் வேகம்?.
இரவுக்கும் தெரியும் ஆம் உறவின் வேகம்.
தெரிந்தே புரிகிறது உன்னிடம் களி
அறிந்தே மறுக்கிறது விடியவும் இனி

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

வண்ணத்துப் பூச்சி

ஏய்! வண்ணத்துப் பூச்சி
உன் வண்ணத்தை தேய்ச்சி
என் எண்ணதில் பூசி
உன் சின்னத்தை நேசி

கண்முடி தூங்கயிலே
முன்னாடி பாய்ந்து வா
உனை நாடி ஏங்கயிலே
துணை தேடி பறந்து வா

எங்கிருந்து பெற்றாய் நீ
எழில் கொஞ்சும் வண்ணங்களை
எனக்கும் நீ சொல்லிவிடு
பிணங்காமல் ரகசியமாய்

பட்டுப் போல் சிறகுகளை
விரிக்கின்ற வடிவுகளை
எட்டி நின்று பார்க்கையிலே
பரவசித்தேன் எனக்குள்ளே

எத்தனை வண்ணமடி
வானவில் வர்ணமடி
எந்தனை கொள்ளையிடும்
கானமும் சேர்ந்தோடி வரும்

உன்போல பிறந்து விட
விண்மேலே பறந்து விட
தன்னார்வம் தோன்றுதடி
கண்களும் ஏங்குதடி

சின்னஞ்சிரு பாலகனாய்
உனைச் சுற்றி வந்தேனே
எப்படியும் பிடித்துவிட
முட்டி மோதி திரிந்தேனே

பட்டாம்பூச்சி உன்னோடு
நானும் பறந்து சுழன்றேனே
அதையெல்லாம் மறந்தாயோ
திசைமாறிப் சென்றாயோ

இப்போதும் நினைகையிலே
எண்ணமெல்லாம் துள்ளுதடி
வண்ண வண்ண தூரிகைகள்
மனதுக்குள் வீசுதடி

மறுபடியும் என் தோட்டத்தில்
வருமுன்னே சொல்லிவிடு
ஒருவர்பின் ஒருவராக
இருவருமே களித்திடுவோம்.


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

மேகம் தேடும் காதல்

மேகம் தேடும் காதல்
கீதம் பாடும் மோதல்
மோகம் சேரும் மாலை
தாகம் தீர்க்கும் சோலை

செல்வாய் நீயும் சீரா
சொல்வாய் எந்தன் தீரா
காதல் நோயை ஜோரா
கண்டு அவளை நேரா

பின்னால் உந்தன் தோழி
தொடர்ந்து வருவதைப் பாராய்
முன்னால் செல்லு விரைந்து
படர்ந்த சாலையில் பறந்து

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

அச்சமில்லை

"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்....
நெஞ்சு மீது பாணம் எய்து சாய்த்து விட்ட போதிலும்,
மஞ்சம் தனில் கொஞ்சுகின்ற இன்பம் பொங்கும் போதிலே
வஞ்சம் தீர்க்க எண்ணமிடும் மாயக்கன்னி ஆயினும்

வண்ணமிகு என் தமிழால் வானம் வரை கூவுவேன்
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

அழகு மலர்

ஆடைக்குள் விரிந்த அழகு மலரே
உன் வாடையில் வதங்கி துரும்பானேன்.
கோடையை தணிக்கும் குளிர் நிலவே
என் மனமேடையில் ஆடிட வாராயோ!

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

சிட்டுக் குருவி

சிட்டுக்குருவி என்றாலே
சிறகடிக்கும் நம் உணர்வுகள்
பட்டுப்பறவை அதனழகை
விட்டுச்செல்ல மனம் வருமோ!

காலயில் கண் விழிப்போம்
ரீங்காரம் கேட்டவுடன்
மாலையில் மயங்கிடுவோம்
அலங்கார ஊர்வலத்தில்

கிட்ட வந்து கொத்தித் தின்னும்
பாங்கான பறவை இது
வட்டமிட்டு துள்ளி ஒடும்
சாந்தமான பிள்ளை இது

சில நாட்களில் எவரேனும்
சிட்டுக்குருவி பார்த்ததுண்டா?
சின்னஞ்சிரு துள்ளல்களை
சிந்தையிலே ரசித்ததுண்டா?

பார்த்திருக்க முடியாது
ரசித்திருக்க வாய்ப்பில்லை
ஏனென்று சொல்லிடவா
என்னுள்ளே எழுந்தவற்றை.

நடமாடும் தொலைபேசி
நிருவணங்கள் எழுப்பிவிட்ட
கோபுரங்கள் மின்னலையை
நகரெல்லாம் நாடெல்லாம்

பறப்பிவிட்ட கோலத்தால்
பறந்து களித்த சிட்டுக்குருவிகள்
மறைந்து விட்டன மாயமாய்
சிறந்த சேவை செய்தனரே!

மனமாற வாழ்த்துவோம் நாம்
நிருவனங்களின் சேவைதனை
உருவாக்க முடியாதோர்
உலைவைக்க முயன்றாரே!


என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

மேலை நாட்டு மோகம்

நண்பன் ஒருவன் நலிவாய் இருந்தான்
கொஞ்சம் பணச் சிக்கல் கும்பத்தில்
திடீர் பணக்காரன் ஆவதெப்படி
தட்டி விட்டான் சிந்தனைக் குதிரையை

ஓர் நாள் இரவில் உதித்தது ஞானோதயம்
எதிர் வீட்டு அனபன் எப்படி பணக்காரன் ஆனான்
நன்றாகவே தெரியும் அன்னிய தேசத்தில் வேலை
அள்ளிக் குவிக்கிறான் பணத்தை.

நாமும் முயன்றால் என்ன?
விசாரித்தான் பலரிடம் கிடைத்தது சில துப்பு
நடையாய் நடந்தான் நாட்கள் பல
நல்ல குழுமம் எதுவென்று

நலிந்தான் மெலிந்தான் நன்றாக
அலைந்தான் திரிந்தான் அயராது
கண்டான் ஒருவனை களிப்புடனே
முடிவும் செய்தான் இவனென்று.

முதலாய்க் கேட்டான் ஒரு லட்சம்
முடிவாய்க் கேட்டான் உடனே தா
உனக்குக் கிடைக்கும் பல லட்சம்
உன் பஞ்சம் எல்லாம் பறந்தோடும்

நயமாய் உரைத்தான் நல் வார்த்தை
நண்பனும் இரைத்தான் ஒரு லட்சம்
நாலா பக்கம் பட்டு
நன்செய் புன்செய் கடன் பட்டு.

இந்தியா வாசல் செல்ல வேண்டும்
மாதம் ஒன்று பொருத்துக் கொள்
வழிச்செலவுக்கு வகையாய் நீ
வறுவாய் கொஞ்சம் சேர்த்துவை.

ஒன்று இரண்டு மூன்று நான்கு
மாதங்கள் போனதே பறந்து
சேதி ஒன்றும் வரவில்லை
தேடிச் சென்றான் மும்பை மாநகர்

முகவரியில் முகவன் இல்லை
முழுவதுமாய் அலந்து விட்டான்
முட்டி மோதிப் பார்த்து விட்டான்
முடிந்த பணம் மடியில் காலி.

திருட்டு ரயில் ஏறிக் கொண்டு
திரும்பி வந்தான் கிராமம் நோக்கி
வருந்தி சேர்த்த பணமும் போச்சு
வருத்தம் வந்து சேர்ந்து போச்சு.

கடன் தொல்லை அதிகமாச்சு
உடன் திரிந்த நட்பு போச்சு
படர்ந்திருந்த தோட்டம் போச்சு
தொடர்ந்து வந்த துன்பம் மிச்சம்.

செலவு மொத்தம் கணக்கு பார்த்தால்
லட்சம் ஒன்றின் மேலே இருக்கும்
வாடி வதங்கி என்ன பயன்
நாடி நின்றான் அடுத்து என்ன

தொலைத்து விட்ட பணத்தை நன்றாய்
நிலைத்து நிற்கும் வயலில் போட்டால்
வளமாய் நெல்லும் விளைந்திருக்கும்
நலமாய் குடும்பம் பிழைத்திருக்கும்

பெட்டிக்கடை வைதிருந்தால்
நட்டமில்லாமல் போயிருக்கும்
தொட்டிப் பயலை நம்பி நானும்
கட்டிக்கொண்டேன் கடனை மடியில்.

எங்கோ ஒலித்தது இன்ப கீதம்
துன்பம் தீர்க்கும் இனிய நாதம்
புரட்சித் தலைவர் சொன்ன ராகம்
எழுச்சி பொங்கும் புதிய வேதம்

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்"
தனக்குள்ளே எழுந்ததொரு புத்துணர்ச்சி
தலை நிமிர்ந்து ஓடிச்சென்றான் வயலை நோக்கி.


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்