Thursday, April 29, 2010

மனம் களிக்கும் பிரம்மாக்கள்.

வான் நீலம் கடல் வாங்கி
தான் நீலம் கொண்டதேனோ?

கடல் நீரை வான் வாங்கி
நிலம் குளிரத் தந்ததேனோ?

வானும் கடலும் தொலைவில்
வாழ்ந்தாலும் இரண்டும் கைகோர்த்தே

நிலம் செழிக்கத் தனை ஈந்து
மனம் களிக்கும் பிரம்மாக்கள்.

"தமிழாய்.. தமிழுக்காய்.."

தமிழாய்...! தமிழுக்காய்...!
_________________________

தமிழாய் தமிழுக்காய் தமிழ்ச் சிசுவாய்
தமிழ்த்தாயின் கருவில் உதித்தாய்
தமிழ்ப்பாலுடன் அமுதும் சுவைத்தாய்
தமிழ்த் தாலாட்டில் உறங்கி விழித்தாய்

தமிழ்தேனுண்டு தாய்மடியில் தவழ்ந்தாய்
தமிழினம் கைகூடி களித்து மகிழ்ந்தாய்
தமிழாசான் கனிச்சொல் பருகி வளர்ந்தாய்
தமிழ்த் துணையும் இணைத்து குளித்தாய்

தமிழ்மூச்சை உயிரில் கலந்து நிறைந்தாய்.
தமிழ்மண்ணை தனக்குள் புசித்து ருசித்தாய்.

தமிழுக்காய் தனைத் தறுவாய்
தமிழுக்காய் துணை நிற்பாய்
தமிழுக்காய் உனை விதைப்பாய்
தமிழுக்காய் கணை தொடுப்பாய்

தமிழுக்காய் தலை நிமிர்வாய்
தமிழுக்காய் சிலை வடிப்பாய்
தமிழுக்காய் கலை வளர்ப்பாய்
தமிழுக்காய் நிலை கொள்வாய்

தமிழ்த்தாய் என்றெல்லாம் நினைத்திடையில்
தமிழை உலையிட்டு விலை கண்டாய் வெளி நாட்டில்.

தமிழா இதுதான் உன் தமிழ்த் தொண்டா?
தமிழ்சாறு உன் உதிரத்தில் இல்லையா?
______________________________________________________

என்றும் அன்புடன்
தமிழன் நீலமேகம்