Sunday, June 13, 2010

மேலை நாட்டு மோகம்

நண்பன் ஒருவன் நலிவாய் இருந்தான்
கொஞ்சம் பணச் சிக்கல் கும்பத்தில்
திடீர் பணக்காரன் ஆவதெப்படி
தட்டி விட்டான் சிந்தனைக் குதிரையை

ஓர் நாள் இரவில் உதித்தது ஞானோதயம்
எதிர் வீட்டு அனபன் எப்படி பணக்காரன் ஆனான்
நன்றாகவே தெரியும் அன்னிய தேசத்தில் வேலை
அள்ளிக் குவிக்கிறான் பணத்தை.

நாமும் முயன்றால் என்ன?
விசாரித்தான் பலரிடம் கிடைத்தது சில துப்பு
நடையாய் நடந்தான் நாட்கள் பல
நல்ல குழுமம் எதுவென்று

நலிந்தான் மெலிந்தான் நன்றாக
அலைந்தான் திரிந்தான் அயராது
கண்டான் ஒருவனை களிப்புடனே
முடிவும் செய்தான் இவனென்று.

முதலாய்க் கேட்டான் ஒரு லட்சம்
முடிவாய்க் கேட்டான் உடனே தா
உனக்குக் கிடைக்கும் பல லட்சம்
உன் பஞ்சம் எல்லாம் பறந்தோடும்

நயமாய் உரைத்தான் நல் வார்த்தை
நண்பனும் இரைத்தான் ஒரு லட்சம்
நாலா பக்கம் பட்டு
நன்செய் புன்செய் கடன் பட்டு.

இந்தியா வாசல் செல்ல வேண்டும்
மாதம் ஒன்று பொருத்துக் கொள்
வழிச்செலவுக்கு வகையாய் நீ
வறுவாய் கொஞ்சம் சேர்த்துவை.

ஒன்று இரண்டு மூன்று நான்கு
மாதங்கள் போனதே பறந்து
சேதி ஒன்றும் வரவில்லை
தேடிச் சென்றான் மும்பை மாநகர்

முகவரியில் முகவன் இல்லை
முழுவதுமாய் அலந்து விட்டான்
முட்டி மோதிப் பார்த்து விட்டான்
முடிந்த பணம் மடியில் காலி.

திருட்டு ரயில் ஏறிக் கொண்டு
திரும்பி வந்தான் கிராமம் நோக்கி
வருந்தி சேர்த்த பணமும் போச்சு
வருத்தம் வந்து சேர்ந்து போச்சு.

கடன் தொல்லை அதிகமாச்சு
உடன் திரிந்த நட்பு போச்சு
படர்ந்திருந்த தோட்டம் போச்சு
தொடர்ந்து வந்த துன்பம் மிச்சம்.

செலவு மொத்தம் கணக்கு பார்த்தால்
லட்சம் ஒன்றின் மேலே இருக்கும்
வாடி வதங்கி என்ன பயன்
நாடி நின்றான் அடுத்து என்ன

தொலைத்து விட்ட பணத்தை நன்றாய்
நிலைத்து நிற்கும் வயலில் போட்டால்
வளமாய் நெல்லும் விளைந்திருக்கும்
நலமாய் குடும்பம் பிழைத்திருக்கும்

பெட்டிக்கடை வைதிருந்தால்
நட்டமில்லாமல் போயிருக்கும்
தொட்டிப் பயலை நம்பி நானும்
கட்டிக்கொண்டேன் கடனை மடியில்.

எங்கோ ஒலித்தது இன்ப கீதம்
துன்பம் தீர்க்கும் இனிய நாதம்
புரட்சித் தலைவர் சொன்ன ராகம்
எழுச்சி பொங்கும் புதிய வேதம்

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்"
தனக்குள்ளே எழுந்ததொரு புத்துணர்ச்சி
தலை நிமிர்ந்து ஓடிச்சென்றான் வயலை நோக்கி.


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

No comments:

Post a Comment