Sunday, June 13, 2010

நெல்லுச் சோறு

காலையில் பழைய கம்பங்களி, பச்சை மிளகாய்
மதியம் கேப்பைக்கூழ் ஊறவைத்த அகத்திக்கீரை
இரவு குதிரைவேலி கருங்காணத் துவையல்

இடையிடையே சாமை, வெண்சோளம்
இதுதான் எங்கள் தினசரி ஆகாரம்
இப்படியே கழிந்ததெங்கள் இளம்பருவம்.

எப்போ வரும் அமாவாசை என்ற ஏக்கம் எப்போதும்
எதற்கென்று தெரியுமா? அன்றுதான் விரதம்.
என்ன விரதம் ஏன் விரதம் என்றெல்லாம் தெரியாது.

தெரிந்ததெல்லாம் ஒன்றெ ஒன்று
அன்று தான் காலையில் இட்லி,தோசை
அன்றிரவில் மட்டும் தான் நெல்லுச் சோறு.

தட்டம் நிறைய சூடான மல்லிப்பூ நெல்லுச்சோறு
கிட்ட குனிந்து மணம் பிடிப்போம் மனம் நிறைய சுகம் பெருவோம்
பளிச்சென்ற வெண்முத்து சிறுமணிகள் சிரிக்கின்ற அழகென் சொல்ல.

தெருவெங்கும் அழைப்பு சொல்லும் மஞ்சப்பாறை
கருவாட்டுக் குளம்பு கூட்டி குனிந்ததலை நிமிராமல்
ஒரே மூச்சில் உள்வாங்கி அடுத்த முறை எதிர்பார்த்து

ஆவலோடு அமர்ந்திருக்கும் முகம்கண்டு அம்மாவும்
ஆரஅமர தின்னு ராசா விக்கல் சிக்கல் வந்துவிடும்
என்ருரைத்து பறிமாறும் நினைவு இன்னும் நெஞ்சினிலே.

பொத்தானில்லா கால்சட்டை மீது சுற்றிய
அரைஞாண் கயிறு அறுத்துத் தெரிக்கும் அளவுக்கு
வயிருமுட்ட உண்டுவிட்டு எந்திரிக்க முடியாமல்

விழிபிதுங்க முழித்துக் கொண்டு உட்கார்ந்த
அழ்கு கண்டு அன்னை என் கைபிடித்து தூக்கிவிட்ட
எழில் எல்லாம் எளிதில் தான் மறந்திடுமோ!

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

No comments:

Post a Comment