Thursday, November 4, 2010

உன்னையே



சூரியனைச் கண்டு சுழலும்
சூரிய காந்தியும்
உன் சுடர் பார்வை பட்டால்
சுற்றி வலம் வரும் உன்னையே.

தவிப்பூ


பூவைத் தலையில்
சூடி மகிழ்ந்து
சிரிக்கும் பெண்ணே..!
உனக்குத் தெரியுமா
பூவை இழந்து
சிரிப்பை மறந்த
செடியின் தவிப்பு..

கொக்கி

கன்னியரின் வெண்விழிக் குளத்து கருமீன்களுக்கு காளையர்கள் சொக்கி சுருண்டு சுட்டி இழுப்பதொரு சுவையான கண் கவரும் வாலிபத்தின் காந்தக் கொக்கி.

வட்டமிடும் காளையரைக் கவர்ந்திழுக்க கன்னியர்கள் கச்சிதமாய் வலையோடு விரித்திழுக்கும் வண்ணமிகு புன்சிரிப்பில் மயக்குவது ஏகாந்தக் கொக்கி.

நீலக்கடல் நடுவினிலே தத்தளிக்கும் படகினிலே விரித்த வலை விழிபார்த்து மீனவர்கள் பாங்குடனே அன்றாட செலவிற்கு ஆவலுடன் பரிதவிக்கும் பசிக் கொக்கி.

கண்களில் மின்னலுடன் கயமையும் கலந்து கொண்டு வஞ்சகப் புன்னகையால் வருவோரைக் கவர்ந்திழுக்க விற்பண்ணர் கடைவிரிப்பில் மறந்திருக்கும் பணக் கொக்கி.

வாசலுக்ககு அழகூட்டி உள்கூட்டில் உரசிவைத்து காரை பெயர்ந்த பழஞ்சுவரை பதமாய் பூசிவைத்து உள்ளமெலாம் உவகையுடன் வாடகைக்கு காத்திருக்கும் உரிமையானின் மனக் கொக்கி.

உள்ளத்தில் தயக்கமுடன் மனதில் ஆசையுடன் தந்தையின் உள்மனதை எடைபோட்டு இன்றைய கைசெலவு கைகூட மைந்தனவன் ஒரு காலில் வழி நிற்கும் சில்லரைக் கொக்கி.

கையில் அல்வாவும் மல்லிகையும் மணமணக்க மனைவியின் பின்புறமாய் நெகிழ்ச்சியுடன் குழல் நுகர்ந்து இரவை சுகமாக்க கன்னமிடும் கணவானின் மோகக் கொக்கி

எதிர்வீட்டு சிங்காரி உடுத்தி சிமிட்டி வரும் காஞ்சிபுரம் கண்ணில் மின்ன இதுவே தருணமென சினுங்கலுடன் தலையணையில் கணவன் காதருகில் கிசுகிசுக்கும் புடவைக் கொக்கி.

மறுமகளின் வாயைக் கிண்டி ஊரெல்லாம் பறைசாற்றி தெரு சிரிக்க தன் மனம் குளிர இதுவும் போதாதென்று மகனின் வரவுக்காய் வத்தி வைக்க காத்திருக்கும் மாமியாரின் உரிமைக் கொக்கி.

மேனியில் மாலை சூடி மேடைகள் முழக்கமிட்டு அரியணை அமர்ந்து விட ஆதரவாய் கொக்கரிக்கும் அரசியலான் பசப்புகளில் அப்பட்டமாய் ஒழிந்திருக்கும் வாக்குக் கொக்கி.

எவன் வருவான் என்றேங்கி நாற்காலி முனை மீது நாசூக்காய் அமர்ந்து கொண்டு கரியத்தால் கையூட்ட அரசுப் பிச்சைகள் அம்சமாய் அபகரிக்கும் எச்சில் கொக்கி.

கொக்கியில் நல் கொக்கி முக்கியமாய் இக்கொக்கி இந்தியனின் தனிக்கொக்கி மின்கம்பி தன் கொக்கி கேட்பார் யாருமின்றி தனதாக்கி இலவசமாய் வசப்படுத்தும் மின்கொக்கி.