Tuesday, June 30, 2015

மலரே!

மலரே! 
மகரந்தம் தூவிச் செல் 

தென்றலே! 
தேகம் தீண்டிச் செல் 

வசந்தமே!
சுகந்தம் பரப்பிச் செல் 

சொந்தமே!
மனம் நிறைந்து நில்.


#நீலா

மழைமகளே

எமது தாகம் தணித்து
தேகம் குளிர வைத்து
நல் ஆரோக்கியம் தந்து
வாழ்வின் இறுதி வரை
கூடவே கலந்து வரும்
வளம் குன்றா அட்சயமே

பூமித்தாய் மனம் மகிழ
புண்ணியம் செய்தவளே
விவசாயம் தழைத்கோங்க
விண்ணின் வழி வந்தவளே
இன்னபிற தேவைகளை
தனை ஈந்து தீர்த்தவளே.

நிறமில்லா நீர்த்தாயே
இத்தலம் செழித்தோங்க
இன்பமாய் உனைத் தந்து
மண்ணுயிர் காத்து நிற்கும்
மாசற்ற உத்தமியே மாதாவே
வணங்குகிறேன் மழைமகளே.


 நீலா

காகிதப் பூக்கள்

காகிதப் பூக்கள்
மணப்பதில்லை
கண்களைக் கவர்ந்து
ஈர்த்திழுக்கும்.

சூசகமாகவே நான்
உணர்த்தியிருந்தும்
உரைக்கவில்லை உனது
புத்தியில்

கவிஞன் நீயதை
உதறியதாலே
கலங்கி வரைகிறாய்
சோகக்கதை.

கண்களைத் திறந்துவை
கருத்தில்கொள்
கலைஞன் நீயிரு
கவனமாகவே.

கவலை வேண்டாம்
இனிமேலும்
ஒருநிலைப் படுத்து
உன்மனதை.

காகிதப் பூக்கள்
மணப்பதில்லை
கண்களைக் கவர்ந்து
ஈர்த்திழுக்கும்.

#நீலா


கையூட்டு இங்கே

லஞ்சம் எனப்படும் கையூட்டு இங்கே
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்
காரியம் சாதிக்க கொடுக்கும் லஞ்சம்
அதை முடிக்க வாங்கும் லஞ்சம்

கடையூழியர் முதல் உயரதிகாரி வரை
அரசும் தனியார் நிறுவனமும் எங்கேயும்
காசின் மேல்தான் கவனம் தினமும்
கொடுத்தால் தான் வேலை முடியும்

கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம்
கொடுப்பவரும் உடந்தையே லஞ்ச ஊழலுக்கு
கொடுப்பதை மறுத்தால் வாங்கும் நிலையிராது
இருவரையும் தண்டிப்பதே முறையாகும் என்பேன்.

கொடுக்கவில்லை எனில் காரியமும் முடியாது
அப்படியே முடிந்தாலும் அது தாமதமாகவே
வேலை வாங்கும் உயர் அதிகாரிக்கும்
தட்டிக் கேட்கும் தணிக்கை யருக்கும்

மந்திரிகட்கும் முதல்வருக்கும் பிரமுகர் கட்கும்
சிறைப் பிடிக்கும் காவலருக்கும் ஆய்வாளருக்கும்
வாதாடும் வக்கீல்கட்கும் தீர்ப்பு வழங்கும்
நீதிபதிக்கும் சில்லரை சென்றால் ஜெயமே.

இருப்பவர் கொடுப்பார் இல்லாதோர் என்செய்வர்
எம்தேசத்தின் இந்நிலை மாறுவது எப்போது
கீழிருந்து மேல்வரை கடும் தண்டனை
மிகவும் அவசியம் இங்கே இப்போது.

#நீலா


கூர் மழுங்கியதோர் சிற்றுளி


சிலை வடிக்கும் சிற்பிக்கே
கலை சொல்லித் தருகிறது
கூர் மழுங்கியதோர் சிற்றுளி.

கூறுகெட்ட உளியே உன்னை
சீர்படுத்திக்கொள் நீ முதலில்
பின்னர் வா பட்டறைக்குள்.

பட்டழுந்தியபின் புரியும் உனக்கு
சிலை வடிக்கும் அதிசிறந்த
கலையின் நுணுக்கம் எதுவென.

கைகளுக்குள் அடங்கியே தலையில்
அடிவாங்கு துள்ள நினைக்காதே
துவண்டு வீழ்ந்து விடுவாய்.

#நீலா

நட்பினைப் பழிக்காதே



நட்புக்கு
ஆணென்ன பெண்ணென்ன
அதற்கேது வரம்பு?
எவரிடத்தில் எதிர் பால்
நட்பு இல்லை?
அதிலென்ன இழிவு கண்டீர்
எம் நட்பே?
ஒழுக்கமான நல் நட்பில்
தவறு இல்லை.


ஆண் பெண்ணிடமும் பெண்
ஆணிடமும் நட்பு கொள்வது
இழிவென்று எவர் சொன்னார்
மூடப்பிராணியே முட்டாள் மகனே

இனக் கவர்ச்சி இருக்குமடா
இரத்தத்தில் ஊறியது அது
சுத்தமாக பழகி விட்டால்
சுகமுண்டு நல்ல நட்பில்.

நட்பினைப் பழிக்காதே பாதகா
உன்னத உறவுடா மூர்க்கனே
புத்தியைத் தீட்டிக் கொள்ளடா
குதர்க்கமாய்ப் பேசாதே காமுகா.

மலர்களைச் சுவைக்க வட்டமிடும்
உனக்கது தெரிய வாய்ப்பில்லை
உனது பரம்பரைப் புத்தியினை
மூட்டைகட்டு முன்னேற வழிதேடு.

உன்னைப் போல் பிறரை எண்ணாதே.

‪#‎நீலா‬

அன்பான அம்மு



நீ என்னை அழைக்கும்

அன்பான அம்மு
செழுமையான செல்லம்
தயவான தங்கம்
குணமான குட்டி(மா)


இதமான இடியட்
சுகமான ஸ்டுபிட்
ரம்மியமான ராஸ்கல்
பாசமான ப்ளடி

நயமான நாய்
எழிலான எருமை
பண்பான பண்ணி
குணமான குரங்கு

கனிவான கழுதை
பதமான பக்கி
தெளிவான டேய்/டா/டி
பாங்கான பா

போன்ற இனிய
கொஞ்சல்களில்
கிறங்கிப் போகிறேன்
இன்பமே...!

‪#‎நீலா‬